காஞ்சிபுரத்தில் உள்ள மரம் வெட்டும் பணித்தளத்தில், ஒன்பது மாத கர்ப்பிணியான தேன்மொழி (35) மற்றும் அவரது பச்சிளம் குழந்தை உயிரிழந்தனர். இருளர் சமூகத்தைச் சேர்ந்த தேன்மொழி, பிரசவ வலியின்போது தார்பாய் கூடாரத்தில் தனியாக விடப்பட்டிருந்த நிலையில் உயிரிழந்ததாக அவரது கணவர் ஆனந்தன் குற்றம் சாட்டியுள்ளார். தங்களுக்கு வழங்கப்பட்ட 20,000 ரூபாய் முன்பணத்தை திருப்பிச் செலுத்தாததால், மருத்துவமனைக்குச் செல்ல உரிமையாளர் ஆறுமுகம் அனுமதிக்கவில்லை என்று அவர் தெரிவித்துள்ளார். கடந்த ஆறு மாதங்களாக ஊதியம் வழங்கப்படாமல் வேலை வாங்கியதாகவும், மருத்துவப் பரிசோதனைக்குச் செல்வதைத் தடுத்ததுடன், மனைவியின் இறப்பை அலட்சியமாகப் பேசியதாகவும் உரிமையாளர் மீது ஆனந்தன் புகார் அளித்துள்ளார்.
இந்தச் சம்பவம் தொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் ஜனநாயக வாலிபர் சங்கம் உள்ளிட்ட அமைப்பினர் காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளரைச் சந்தித்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினர். இதனைத் தொடர்ந்து, வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், கொத்தடிமை முறை ஒழிப்புச் சட்டத்தின் கீழும் வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


